26 February 2018

குலசேகராழ்வார்


இன்று  (26.2.2018)  குலசேகராழ்வார்    அவதார தினம் .....


மாசி -புனர்பூசம்









 குலசேகராழ்வார்  வாழி திருநாமம்!

அஞ்சனமா மலைப்பிறவியாதரித்தோன் வாழியே!

அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே!

வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே!

மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே!

அஞ்சலெனக் குடப்பாம்பிலங்கையிட்டான் வாழியே!

அநவரதமிராமகதை அருளுமவன் வாழியே!

செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே!

சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.!




குலசேகராழ்வார்

பிறந்த   -காலம் 9ம் நூற்றாண்டு

பிறந்த இடம் -திருவஞ்சிக்களம்

பிறந்த மாதம் - மாசி

திருநட்சத்திரம்- புனர்பூசம்

வேறு பெயர்கள்- கொல்லி காவலன்,கூடல் நாயகன், கொயிகொனே , வில்லவர் கோனே , செய்ரளர் கோனே

சிறப்பு -ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் - பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்

பிரபந்தங்கள்: முகுந்தமாலா, பெருமாள் திருமொழி

பரமபதம் அடைந்த இடம்: திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில்









    குலசேகர பெருமாள் சாதாரண மாந்தராய் மண்ணில் பிறக்கவில்லை. அவர் மூவேந்தர்களில் ஒருவரான சேரப் பேரரசின் செல்வக் குமரனாய் அவதரித்தார்.

அரச குடும்பத்தில் பிறந்த இவர், மன்னனாய், மண்ணைக் கைப்பற்றி வாழாமல், மாலவனின் மனதைக் கைப்பற்ற எண்ணி வாழ்ந்த உத்தமர்.

      பாலகனாய் இருந்த காலத்திலே இவர் வேதங்கள், வெவ்வேறு மொழிகள் என்று கல்விகேள்விகளில் சிறந்து விளங்கியதோடல்லாமல்,

வாள் வீச்சு, அம்பெய்தல், குதிரையேற்றம், யானை ஏற்றம், தேரோட்டல், கதை, கம்பு, சிம்பு என்று அனைத்திலும் அவர் வல்லவராய் இருந்தார்.

உரிய காலத்தில் அரச பதவியேற்ற இவர், செவ்வனே அரசாட்சி நடத்தி அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றார்.






      இவர் போர்க்களத்தில் சென்றால், வாகை மாலையன்றி வேறு எதையும் சூடமாட்டார். தன் தோள் வலிமையாலும், அறிவுக்கூர்மையினாலும், ஸ்ரீரங்கநாதரின் அருளினாலும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். அவரது திறமையையும், பேராண்மையையும் கண்டு, பாண்டிய மன்னன் தன் மகளை அவருக்கு மணம் செய்து வைத்தார்.

      மன்னன் குலசேகரருக்கு ஒரு ஆண்மகவும், பெண்பிள்ளை ஒன்றும் பிறந்தது. தன் மகனுக்கு திடவிரதன் என்று தன் தந்தையாரின் பெயரையேச் சூட்டினார். இவ்வாறு வீட்டையும், நாட்டையும் கருத்துடன் ஆண்டு வந்த குலசேகரருக்கு, போரில் பல உயிர்கள் இறப்பது அவருக்கு வெறுப்பை உருவாக்க ஆரம்பித்தது. அதனால், நாளாக நாளாக அரச வாழ்வில் விருப்பங்குறைய ஆரம்பித்தது.




இராமனின் கதைகள்

      எம்பிரான் இராமராசனின் வாழ்வியலிலும், மழலைக்கண்ணனின் கள்ளக் குறும்புக் கதைகளிலும் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்.

     ஒவ்வொரு நாளும் பண்டிதர்களை அழைத்து, எம்பிரான் இராமனின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதில் தம்பி இலக்குவனனை சீதாப் பிராட்டிக்குக் காவல் வைத்து விட்டு, அசுரர்களை எதிர்க்கத் தனியே சென்றார், இராமர் என்று சொல்லக்கேட்டார்.

     இதைக்கேட்ட, குலசேகரர், தனியே இருக்கும் இராம்பிரானுக்கு அசுரர்களால் ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சி, தன் நால்வகைப்படைகளையும் இராமபிராணுக்குத் துணையாய் அனுப்ப எத்தனித்தார்.

அப்பொழுது, அந்த பண்டிதர், இராமர் ஒருவரேத் தனியாய் அவர்களை எல்லாம் வென்றுவிட்டார், என்று கூறி சமாதானப் படுத்தினார்.

   அவரது பற்றும் பக்தியும் இத்துடன் நின்று விடவில்லை. அவர் இராமபிரானுக்காக ஒரு பொற்சிலையை நிர்மாணித்து, அதை தினமும் வழிபட்டு வந்தார்.




      மன்னனின் நிலையை அறிந்த அவரது அமைச்சர்கள், இந்நிலை நீடித்தால், நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்று எண்ணி, அவருக்கு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மேலும், விஷ்ணு பக்தர்கள் மேலும் இருந்த மதிப்பையும் மரியாதையையும் அகற்றுவதற்கு ஒரு ஏற்பாடு செய்தனர்.

       அரண்மனையுள் அரசன் வணங்கும் பெருமாளின் திருவாபரணப்பெட்டியில் இருந்தவற்றுள் மிக அழகான ஒரு நவரத்தின மாலையை எடுத்து மறைத்து அரசனிடம் ஆபரணத்தைத் திருடியது விஷ்ணு பக்தர்கள் தான் என்று பழி சுமத்தினர்

      இதைக்கேட்ட குலசேகரர், செந்தனலில் தன்னைச் சுட்டது போல் துடித்தார். ஒருநாளும் எம்பிரானின் பக்தர்கள் , வெறும் பொன், பொருள் மீது பற்று கொண்டவர்கள் அல்ல, என்று அவர் தீவிரமாக நம்பினார்.

       ஒரு குடத்தினுள் நச்சுப் பாம்பொன்றை இட்டு மூடினர். அடியவர் தாம் குற்றம அற்றவர் எனில் அக் குடத்தில் கை விட்டு மீள வேண்டும் என்றனர்.

அரசரோ அடியவரைத் தடுத்து அவர்கள் சார்பாக “பேரனன்பர் கொள்ளார்” என்று கூறி கோவிந்தனை வேண்டிக் குடத்தில் கை விட்டு வெற்றிகரமாக மீண்டார்.

அமைச்சர்கள் மனம் வருந்தி மன்னன் தாள் பணிந்து நவரத்தின மாலையை சமர்ப்பித்து மன்னிக்க வேண்டினர்.

    இதனால் மனம் நொந்த குலசேகரரும், தன் ஆட்சிப்பொறுப்பை மகன் திடவிரதனிடம் ஒப்படைத்து விட்டு, அடியாரை மதிக்காத, மக்களிடையே வாழ விருப்பற்ரவராய்  “ஆனான செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் ” என்று தன் விருப்பத்திற்குரிய அடியார் குழாத்தோடு திருவரங்கம் சென்றடைந்து,

அடியவர் குழாத்தொடு,

 அணியரங்கத்தம்மானுக்கு பணி செய்து, 105 பாசுரங்களைக் கொண்ட பெருமாள் திருமொழி என்ற திவ்யப்ரபந்தத்தை பாடியருளினார்.

இராமபிரானின் பல்வேறு புனிதத்தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு பாடல்கள் பாடினார்.

இராமபிரானைப் போலவே இவரும் திருவரங்க பெருமானை வழிபட்டார். இராமபிரானைப் பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமானை பெரிய பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமான் வீற்றிருந்த திருக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.



இவ்வாறு, பெருமாளை மட்டுமே இவர் வணங்கியதால் குலசேகரப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.

குலசேகரப் பெருமாள், பெருமாள் மீது பக்திச்சுவைச் சொட்ட பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி ஆகும்.

 பல திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக மன்னார்கோயில் திருத்தலம் வந்தார் குலசேகரர்.

அங்கே பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்வெய்தி அங்கேயே முக்தியடைந்தார். அங்கே அவருக்கு தனி சந்நிதியும் இருக்கிறது.

 இந்தத் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

குலசேகர ஆழ்வாரின் பிரபந்தப் பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என்று 105 பாடல்கள்.






647


இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி*  இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த*  அரவரசப்
பெருஞ்சோதி  அனந்தன் என்னும்*  அணிவிளங்கும் உயர்வெள்ளை அணையை மேவி*
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி*  திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்*
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு*  என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (2)


648


வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த*  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்*  மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்*
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை*  கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
மாயோனை மணத்தூணே பற்றி நின்று*  என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!

649


எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி*  ஈரிரண்டு முகமும் கொண்டு*
எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்* தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற*  செம்பொன்-
அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற* அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு அங்கு* அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே




ஓம் நமோ நாராயணாய நம!!
 குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்!!





அன்புடன்
அனுபிரேம்...


5 comments:

  1. அறிந்தேன், மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  2. நிறைய தெரிந்து கொண்டோம்....மிக்க நன்றி....

    ReplyDelete
  3. குலசேகராழ்வார் தெரியாத தகவல்கள். அறிந்துகொண்டேன். அழகான படங்கள்.

    ReplyDelete