02 February 2018

திருமழிசையாழ்வார்




இன்று  (2.2.2018)  திருமழிசையாழ்வார்    அவதார தினம் .....

தையில் மகம்........










திருமழிசையாழ்வார் வாழி திருநாமம்!

அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே !

அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே!

இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே!

எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே!

முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே!

முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே!

நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே!

நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே!








திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)

பிறந்த காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு

நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி)

கிழமை : ஞாயிறு

தந்தை : பார்க்கவ முனிவர்

தாய் : கனகாங்கி

எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்

பாடல்கள் : 216

சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்



திருமழிசையிலே,   பார்க்கவ முனிவருக்கும்,  கனகாங்கி என்ற அம்மையாருக்கும்  திருமகனாக , தை மாதம் மகம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்   திருமழிசையாழ்வார்.

இவர் பிறந்த பொழுது , இவரின் திரு உடம்பில் அவயவங்கள் இன்றி வெரும் பிண்டமாகப் பிறந்தார். எனவே இவரது பெற்றோர்கள் இவரை அவ்வூரிலே ஒரு வேலி ஓரமாகக் கிடத்திவிட்டுச் சென்றுவிட்டனர்.

எம்பெருமானின் கருணை கடாக்ஷத்தினால் இவருக்கு கைகள், கால்கள் மற்றும் எல்லா உறுப்புகளும் கிடைக்கப் பெற்றன.

இப்படி முழு உருவம் பெற்று ஒரு அழகான குழந்தையாக எம்பெருமானால் மாற்றப்பட்ட இவர், யாரும் இல்லாத நிலையில் அந்த வேலியின் அருகில் கிடந்த நிலையில் அழுது கொண்டு இருந்தார்.

அப்பொழுது, அப்பக்கமாக வந்த பாணர்குலத்தைச் சேர்ந்த திருவாளன் தம்பதியினர், குழந்தையின் அழுகுரல் கேட்டு ,......

  வீதியின் ஓரத்தில் ஆதரவின்றி கிடக்கும் அக்குழந்தையை, தங்களுக்கு பகவான் அருளியதாக எண்ணி , மிக்க மகிழ்ச்சியுடன் தங்கள் இல்லம் எடுத்துச் சென்றனர்.





திருமழிசையாழ்வார் அப்பாணர் குலத்திலே வளர ஆரம்பித்தார், தனக்கு உணவாக பாலைக் கூட பருகாமல், நன்கு வளர்ந்து வந்தார். இப்படி எந்த உணவும் உண்ணாமல் வளர்ந்து வந்த இந்த அதிசயக் குழந்தையைப் பார்த்து அவ்வூர் மக்கள் மிகுந்த அதிசயப்பட்டனர்.

பால் முதலான திரவ உணவுகளைக் கூட பருகாமல் வளர்ந்து வரும் குழந்தையை நினைத்து, பாணர்குல தம்பதியினர் மிக்க வருத்தமடைந்தனர்.

 ஒரு நாள் அக்குழந்தையை பார்க்க ஒரு வயதானவர் தன் மனைவியோடு வந்தார். இருவருமே திருமால் அடிமைகள். பல ஆண்டுகளாகியும் குழந்தை செல்வம் இல்லாத குறையோடு இருந்தனர்.

இந்த அதிசய குழந்தையை பற்றி கேள்விப்பட்டு அதை பார்க்க வந்தனர். அதற்கு கொடுப்பதற்காக மதுரமான பால் கொண்டு வந்திருந்தனர்.

அதை பார்த்த பாணர் குல பெண்... 'ஐயா! இக்குழந்தை இதுவரை எதையும் உண்டதில்லை" என்று சொன்னாள்.






ஆனால் அவர்களோ வெள்ளிக்கிண்ணத்தில் பாலை எடுத்து "திருமாலின் திருஅவதரமாக திருமழிசையில் அவதரித்துள்ள அருட்செல்வமே எங்கள் மனக்குறை நீங்க பாலை பருகி மகிழ வேண்டும்" என்று வேண்டிக் கொண்டு பாலை புகட்டவும் குழந்தை புன்முறுவல் பூத்த வண்ணம் பாலை பருகிவிட்டது.


அதை கண்டு அனைவரும் ஆச்சர்யமுற்றனர். "என்ன தவப்பயனோ தாங்கள் கொடுத்த பாலை பருகி விட்டது இக்குழந்தை.

தாங்கள் எங்கள் மீது கருணைக் கொண்டு நாள்தோறும் வந்து பால் கொடுக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்" என்றனர் திருவாளனும் பங்கஜவல்லியும்.

அதன்படியே தினமும் வந்து பால் புகட்டிச் சென்றனர் தம்பதியர்.

தினமும் பால் காய்ச்சி சமர்ப்பித்துக் கொண்டிருந்த அந்த வயதான தம்பதியருக்கு பிள்ளையில்லா குறையை தீர்க்க திருவுள்ளம் பற்றியது அக்குழந்தை. 

எப்போதும் பால் முழுவதையும் அருந்தி விடும் அக்குழந்தை அன்று அந்த பாலை மீதம் வைத்துவிட்டது.

நீங்களும் அருந்துங்கள் என்று சொல்வது போல் ஜாடைக் காட்டியது. அதை அருந்தி விட்டு அவர்களும் வீடு திரும்பினர்.

 அந்த பாலின் சக்தியினால் அவர்கள் இருவருக்கும் வியோதிகம் நீங்கி வாலிபம் திரும்பியது. . தெய்வக் குழந்தையின் சக்தியால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அதற்கு 'கனிக்கண்ணன்' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். ஊரார்கள் இது கண்டு அதிசயித்து அந்த தெய்வக் குழந்தையை திருமழிசையார் என்றே வணங்கி பெருமதிப்பும் பக்தியும் கொண்டனர்.




அந்த தம்பதியர் கனிக்கண்ணனை திருமழிசையார் முன்னிலையில் கொண்டு வந்து விட, அவரது கடாக்ஷத்திலே நல்ல அறிவைப் பெற்று, அவருக்கு சிஷ்யன் ஆகி, பாகவத நிஷ்டனாகி, இருவரும் தோழர்களாக வளர்ந்து வந்தார்கள்.


திருமழிசையார் ஏழு வயது வரை அவரை வளர்த்தவர்களோடு வாழ்ந்து வந்தார். பின்னர் ஐம்புலன்களையும் அடக்கி அஷ்டாங்க யோகத்தால் முழுமுதற் கடவுளை அடைய விரும்பினார்.

 உலகின் முதற்பொருளை உணர்ந்த பின்னரே யோகத்தில் அமர வேண்டும் என்று எண்ணிய அவர் அதற்குரிய வழியை ஆராய எல்லா சமய நூல்களையும், தத்துவங்களையும் கண்டறிய எண்ணினார்.

சாக்கியம், சமணம் என்னும் பல நூல்களை கற்றுணர்ந்தார்.

 தெளிவு பிறக்காமல் சைவ நூல்களையும் ஆராய்ந்தார்.

பல தலங்களுக்குச் சென்று வேதத்தை ஒப்புக்கொள்ளாத பிற சமயங்கள், வேதத்தை ஒப்புக்கொண்டும் அதற்கு அவப்பொருள் கூறும்  மதங்களான அகச்சமயங்கள் ஆகிய ஒவ்வொரு மதத்திலும் அந்தந்த மதத்திற்கு தக்க ஒழுக்கத்தோடு அவற்றில் ஊன்றி நின்று ஆராய்ந்து பார்த்து, அவற்றில் உள்ள குறைபாடுகளை கண்டு அவற்றிலிருந்து விலகி கடைசியில் உலகிற்கு மூலப்பொருளாக நிற்பது சிவம் ஒன்றேயாகும் என்று முடிவு கட்டி யோகங்கள் பலவும் செய்து சித்தராக மாறினார்.




 தொண்டை மண்டலத்தில் உள்ள சைவ, வைணவ க்ஷேத்திரங்களை தரிசித்துக் கொண்டே வந்த திருமழிசையார் திருமயிலையில் உள்ள பேயாழ்வார் அமைத்துள்ள நந்தவனத்தை வந்தடைந்தார்.

அங்கே துளசி செடியின் அருகே நெற்றியில் திருமண் துலங்க துளசி மணி மாலைகளுடன்,  தியானத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீவைஷ்ணவ சீலரான பேயாழ்வாரைக் கண்டார்.

அவரைக் கண்டதும் திருமழிசையார் மனதில் ஒருவித உணர்ச்சி ஏற்பட்டது.

அவரது தேஜசைப் பார்த்து கொண்டிருந்த மாத்திரத்திலேயே அவரை தமது ஞான குருவாக வரித்துக் கொண்டார்.

அப்போது கண்விழித்தார் பேயாழ்வார்.

திருமழிசையார் அவரை வணங்கி, "ஸ்வாமி அடியேன் திருமழிசையார்" என்றார்.

திருமழிசையார் பெரிய யோகி, தத்துவ மேதை, சைவத்தில் ஆழ்ந்த பற்றுடையவர், பிற மதங்களை கைவிட்டவர் என்றெல்லாம் பலர் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறார் பேயாழ்வார்.

அவருக்கு உண்மைகளை எடுத்துரைத்து அவரை ஸ்ரீவைஷ்ணவனாக ஆக்குவதற்கான முயற்சியில் ஈடுபட எண்ணிய பேயாழ்வார் "அப்படியா, அடியேனை பேயன் என்றழைப்பார்கள். உம்மை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஸ்ரீவைஷ்ணவனாகப் பிறந்தும் உலகம் அனைத்திற்குமான மூலக்காரணமும் பரம்பொருளுமான முழுமுதற்பெருமான் ஸ்ரீமந்நாராயணனைப் பற்றி உணராது போனீரே!" என்று கூறினார்.


அதன் பிறகு இருவருக்கும் வாதம் ஏற்பட ஆயிரக்கணக்கான வசனங்களையும் நியாயங்களையும் எடுத்து உரைத்து கடைசியில் திருமழிசையாரை வெற்றி கொண்டார் பேயாழ்வார்.

 அவரின் கருத்துகளில் மனத்தை பறிக்கொடுத்த திருமழிசையார் வைஷ்ணவத்தை மிகவும் பெருமையோடும் பூரிப்போடும் மனங்குளிர ஏற்றுக்கொண்டார்.

மனம் திருந்திய அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களோடு மந்த்ரா அர்த்தங்களையும் திருமழிசையார் செவியில் முறைப்படி உபதேசித்தார் பேயாழ்வார்.

ஸ்ரீமந்நாராயண மந்த்ரம் செவிகளில் பாய்ந்ததும் திருமழிசையார் பரம விஷ்ணு பக்தரானார்.

அத்திருமந்த்ர மகிமையால் ஸ்ரீமந்நாராயணனை தன் அகக்கண்களால் கண்டார்.






சிரத்தின் மீது ஆரம் உயர்த்தி கைதொழுது அநேக தண்டனிட்டு, கண்களில் நீர் மல்க மெய்மறந்து பலவாறாக பாசுரங்களைப் பாடி பெருமானைத் துதித்தார் திருமழிசையார்.

அதைக் கண்டு பேரானாந்தம் அடைந்த பேயாழ்வார் எம்பெருமானை சிந்தையிற்கொண்டு யோக நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.

 திருமழிசையாரும் அவரை வணங்கி விடைப் பெற்று திருமழிசைக்கு வந்து யோக நிலையில் நின்று திருமகள் கேள்வனை தியானித்துக் கொண்டிருந்தார்.

சுதர்சனத்தின் அம்சமாய் அவதரித்த ஸ்ரீவைஷ்ணவ பக்தரான அவர், சக்கரம் போன்று சுழன்று சுழன்று பல மதங்களில் உருண்டும் கிடந்தும் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் திருவடிக்கமலம் கிடப்பதே மெய்யான பொருள் என்பதை மனதில் உறுதியாகக் கொண்டார்.



 பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 13 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.



752)
பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்

தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்

மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்

நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே.



(753)
ஆறுமாறு மாறுமா யோரைந்துமைந்து மைந்துமாய்

ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்

வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்

ஊறொடோசை யாயவைந்து மாய ஆய மாயனே.


(754)
ஐந்துமைந்து மைந்துமாகி யல்லவற்று ளாயுமாய்

ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே

ஐந்துமைந்து மைந்துமாகி யந்தரத்த ணைந்துநின்று

ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே.



ஓம் நமோ நாராயணாய நம!!
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!





அன்புடன்
அனுபிரேம்...

6 comments:

  1. அழகான படங்கள்.. அற்புத தரிசனம்..
    திருமழிசையாழ்வாரின் விரிவான வரலாறு கண்டு மகிழ்ச்சி..

    ஹரி ஓம்..

    ReplyDelete
  2. விரிவான தகவல்களோடு நல்லதோர் பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  3. திருமழிசையாழ்வாரின் வரலாறு கொடுத்தமைக்கு மகிழ்ச்சி.
    அழகான படங்கள்.

    ReplyDelete
  4. திருமழிசை ஆழ்வார் பற்றி விரிவான தகவல்கள்...படங்களும் அழகாய் இருக்கின்றன

    ReplyDelete
  5. திருமழிசையாழ்வாரின் விரிவான தகவல்களை அறிந்துகொண்டேன்.படங்கள் அழகு.

    ReplyDelete