03 December 2017

திருப்பாணாழ்வார்


இன்று  (3.12.2017) திருப்பாணாழ்வார்  அவதார தினம் .....

கார்த்திகையில் ரோஹிணி..










 திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்!


உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே

உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்தவள்ளல் வாழியே

வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே

மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே

அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே

அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே

செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே

திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே...!







திருப்பாணாழ்வார்



பிறந்த இடம்    : உறையூர் (திருச்சி)

பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு கார்த்திகை                                           மாதம்.

நட்சத்திரம்     : கார்த்திகை ரோகிணி

கிழமை            : புதன்

எழுதிய நூல்  : அமலனாதிபிரான்

பாடிய பாடல் : 10

சிறப்பு                : திருமாலின் ஸ்ரீவத்சத்தின் அம்சம்







இவர் தினமும்  கையில் வீணையேந்தி காவிரியாற்றின் தென்கரைக்கு செல்வார்.

பாணர் குலத்தைச் சேர்ந்தவர் ஆதலால் திருவரங்கத்தின் உள்ளே செல்வதற்கு இவருக்கு அனுமதி கிடையாது.

அதனால் இவர் காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருமாலை வழிபட்டுவந்தார்.

அங்கிருந்தபடியே ஸ்ரீரங்கப்பெருமாளை நோக்கி பாடுவார்.

ஒருமுறை இப்படி பெருமாளை நோக்கி பாடிக்கொண்டிருக்கும் போது சாரங்கமுனி  என்பவர் பெருமாளை நீராட்ட பொற்குடத்தில் நீர் எடுத்து  சென்றார்.

அப்போது, தான் செல்வதற்காக கைதட்டி திருப்பாணரை விலக கூறினார்.

பெருமானின் நினைப்பிலேயே இருந்ததால் சாரங்க முனிவர் கூப்பிட்டதை திருப்பாணர் கவனிக்க வில்லை.

இதனால் கோபம் கொண்ட சாரங்கமுனி திருப்பாணரை கல்லால் எறிந்து அவர் தலையில் ரத்தம் வர செய்தார்.




இதன்பின் பொற்குடத்தில் இருந்த நீரை எடுத்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய சாரங்கமுனி முயன்றபோது பெருமாளின் தலையில் ரத்தம் வருவதை பார்த்து துடித்தார்.

 இதற்கான காரணத்தை அறிய முடியாததால், ஏதும் சாப்பிடாமல் உறங்கி விட்டார்.

 பெருமாள் சாரங்கமுனி கனவில் தோன்றி ஆற்றின் கரையில் நின்று  என்னைப்பாடிக்கொண்டிருந்த திருப்பாணரை கல்லால் தாக்கினாய்.

என் உள்ளம் உண்மையான பக்தனான திருப்பாணர் மீது இருந்ததால், அவன் மீது எறிந்த கல் என் மீது பட்டது.


எனவே திருப்பாணரிடம் சென்று மன்னிப்பு கேட்டு, அவனை தோள்மீது  சுமந்து கோயிலுக்கு வந்து என்னை தரிசனம் செய்ய வைப்பாயாக என்று பெருமாள் கூறி மறைந்தார்.

பெருமானின் உத்தரவுப்படி சாரங்கமுனி திருப்பாணரை தோளில் சுமந்து பெருமாளை தரிசனம் செய்ய வைத்தார்.




இதுநாள் வரை பெருமாளை பார்த்திராத திருப்பாணர் .......பெருமாளின் பாதம் முதல் உச்சி வரை பார்த்து மகிழ்ந்தார்.




அவர் படிப்படியாக இறைவனின் திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொன்றாகக் கண் குளிரத் தரிசித்தார்.

அத்துடன் அவர் நின்று விட வில்லை.



தன் கண்ணால் கண்டு, உயிருருக அனுபவித்த இன்பத்தை, பத்து பாசுரங்களில் இறைவனின் திருவடி, தூய ஆடை, உந்தி(தொப்புள்), திருமார்பு, கண்டம்(கழுத்து), பவளவாய், கமலக்கண்கள், திருமேனி உட்பட பெருமாளைப் பற்றிய ஒவ்வொரு அழகையும் ரசித்து

 பாடி ,

பரவசமடைந்து,

இறுதியில்.....



கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளங் கவர்ந்தானை
அண்டா கோனணி அரங்னென் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாயே

என்று பத்துப்பாசுரங்களையும் பாடிமுடித்தார்.



 திருப்பாணாழ்வார் கடைசிப்பாகத்தில் அரங்கண் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணாவே என்ற இறுதி அடியைப்பாடி முடித்ததுமே அனைவரும் காணும்படி பெருமாளின் திருவடிகளில் சரணடைந்து தோன்றாத்தன்மை பெற்று இவ்வுலகை விட்டு மறைந்தார்....






927)

அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த

விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்

நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்திருக்

கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே.




(928)

உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற

நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை

கவர்ந்த வெங்கணைக்காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்தம்மான்அரைச்

சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென் சிந்தனையே,





(929)

மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்

அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில்

உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே.



ஓம் நமோ நாராயணாய நம!!
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!!




 அன்புடன்
அனுபிரேம்

8 comments:

  1. காலையில் நல்லதொரு தரிசனம் கண்டேன் நன்றி

    ReplyDelete
  2. அருமை.. அழகிய படங்களுடன் இனிய பதிவு..

    திருப்பாணாழ்வாரைப் பற்றி அறிந்திருந்தாலும்
    மீண்டும் படிக்கும் போது பரவசம்..

    திருப்பாணாழ்வார் திருவடிகள் சரணம்..

    ReplyDelete
  3. அழகான படங்களுடன் திருப்பாணாழ்வார் வரலாறு சொன்ன விதம் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. அழகான படங்கள்! திருப்பாணாழ்வார் குறித்த வாழ்க்கைக் குறிப்புகள் எல்லாமே சிறப்பு அனு!!

    கீதா

    ReplyDelete
  5. திருப்பாணாழ்வார் சரித்திரம், அவர் பாடிய பாடல், அருமையான அழகான படங்கள் என்று பதிவு அருமை அனு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. படங்கள் அனைத்தும் அருமை, புதுப்பெயர், புதுத்தகவல்கள் எனக்கு.

    ReplyDelete
  7. படங்கள் அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete