25 October 2017

சுவாமி மணவாள மாமுனிகள்..


சுவாமி அழகிய மணவாள மாமுனிகள்..


பெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க,

ஓராண் வழி ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்பரையில்    இறுதி

ஆசார்யனாகஎழுந்தருளி இருந்து

குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார்

சுவாமி அழகிய மணவாள மாமுனிகள் ....


அவரின் திருநக்ஷத்ரம் இன்று  (25. 1௦.2௦17)  ஐப்பசி  திருமூலம்.....








திருநக்ஷத்ரம்           : ஐப்பசியில் திருமூலம்

அவதார ஸ்தலம்    : ஆழவார்திருநகரி

ஆசார்யன்                 : திருவாய்மொழிப் பிள்ளை

பரமபதித்த இடம் : திருவரங்கம்

காலம்                           : கிபி 1370 - 1443





ஆழ்வார்திருநகரியிலே

 திகழக்கிடந்தான் திருநாவீறுடையபிரான் ஸ்ரீரங்க நாச்சியார்

 தம்பதிக்கு,

 ஆதிசேஷன் திருவதாரமாகவும் ,

 யதிராஜர் புனரவதாரமாகவும் ...

ஜனித்த வள்ளல் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.









நம்பிள்ளையின் திருவாய்மொழி 36000 படி ஈட்டை உள்

 அர்த்தங்களை   அழகான தமிழில் எல்லோருக்கும்

புரியும்படி விரிவுரைக்கும் வல்லமை பெற்றவர்  சுவாமிகள்...



மணவாள   மாமுனிகளிடமிருந்து    திருவாய்மொழியின்

 விசேஷ அர்த்தங்களைத் தான்

எவ்வித இடையூறுகளும் இன்றிக் கேட்க வேண்டும்

என்ற ஏக்கமும் ,


மணவாள மாமுனிகளைத் தனக்கு

 ஆசார்யனாகப் பெற வேண்டும் என்ற

திருவுள்ளமும் பெரிய பெருமாளுக்கு ஏற்பட,


ஒரு பவித்ரோத்சவ சாற்றுமறை நன்னாளிலே,

 ஈடு 36000த்தின் வ்யாக்யானங்களைக் கொண்டு

 நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களைத்

 தனக்குக் காலக்ஷேபம் செய்ய வேண்டும் என்று நியமித்தார்.

இந்தக் காலக்ஷேபம் எந்த விதமான இடையூறுகளும்

 இடைஞ்சல்களும் இன்றி நடக்கவேண்டும் என்றும்

உத்தரவிட்டார்.






இதனை மணவாள மாமுனிகள் பெருமிதத்தோடும் ,

 இப்பணிக்குத் தன்னைப் பெரிய பெருமாள்

 தேர்ந்தெடுத்ததை மிக நைச்யத்தோடும் (தன்னடக்கத்தோடும்)

ஏற்று மகிழ்ந்தார்.


இதனைத் தொடர்ந்து ,அடுத்த நாள் மணவாளமாமுனிகள்

 பெரிய பெருமாள் சந்நிதி துவாரபாலகர்களுக்கு வெளியில்

அமைந்த பெரிய திருமண்டபத்திற்கு எழுந்தருளுகையில்,

நம்பெருமாள் தனது தேவிமார்களோடும்,

சேனை முதல்வரோடும்,

கருடனோடும்,

 திருவானந்தாழ்வானோடும் மற்றுமான

ஆழ்வார் ஆசார்யர்கள் பரிவாரங்களோடும் காத்துக்

கொண்டிருந்தார்.





 இதனைக் கண்டு நெகிழ்ந்த பெரிய ஜீயர் காலக்ஷேபத்தை

 ஈடு 36000 படி வ்யாக்யானத்தை 6000 படி , 9000 படி , 24000 படி, 12000 படி


உள்ளிட்ட மற்ற வ்யாக்யானங்களோடு துவங்குகிறார்.


பாசுரங்களுக்குப் பதபதார்த்தம் (சொல்) இது என்றும்,

 ச்ருதி, ஸ்ரீபாஷ்யம், ச்ருதப்ரகாசிகை, ஸ்ரீ கீதாபாஷ்யம்,

ஸ்ரீ பாஞ்சராத்ரம், ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ விஷ்ணு புராணம்

போன்றவைகளின் அடிப்படையில் அர்த்தம் இது என்றும்

மிக விசதமாக நெய்யிடை நல்லதோர் சோறாய் சமைத்து சுமார்

 10 மாத காலம் சாதித்து வந்தார்.



 இறுதியிலே சாற்றுமறைக்கான தினம் ஆனி திருமூலத்தன்று

அமைகிறது.






இதனைத் தொடர்ந்து நம்பெருமாள்

 அரங்கநாயகம் என்ற சிறு பிள்ளையின் வடிவில்,

மண்டபத்தில் உள்ளோர் தடுத்தும்,

பெரிய ஜீயர் திருமுன்பே வந்து தோன்றி


 “ஸ்ரீசைலேச தயாபாத்ரம் ”

என்று சாதித்து மேலும் சாதிக்குமாறு  கேட்க


“தீபக்த்யாதி குணார்ணவம்”

என்றும் மேலும் சாதிக்கப் பணிக்கும் பொழுது



 “யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ”

என்று முடித்து ஓடி சென்றுவிட்டார்.


இந்த தனியன் ச்லோகத்தை ஓலைப்படுத்தி அச்சிறுவனை மீண்டும்


 வாசிக்கக் கூறுகையில், அச்சிறுவனால் அதைப் படிக்க


இயலாமையைக் கண்டு அனைவரும் முன்னர் வந்த சிறுவன்

நம்பெருமாளே அன்றி சாதாரண பாலகன் அல்லன் என்று

உணர்ந்தனர்.




நம்பெருமாள் இவ்வாறாக ஆசார்யனுக்குத் தனியன்

 சமர்பித்ததனைத் தொடர்ந்து அந்தத் தனியனை...

அனைத்து கோயில்கள், மடங்கள், திருமாளிகைகள் போன்ற


இடங்களில் அருளிச்செயல் சேவிப்பதற்கு முன்னும் பின்னும்

 இதனைச் சேவிக்க உத்தரவும் இட்டார்.



இந்த வேளையிலே , ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஆணைக்கிணங்க

மணவாள மாமுனிகளைக் கொண்டாடும் ஒரு வாழி திருநாமத்தை

அப்பிள்ளை சாதித்தார்.



மணவாள மாமுனிகளின் ஒப்பற்ற இந்த வைபவம் காட்டு தீ போல்

அனைத்து திக்குகளிலும் பரந்தது .





மணவாளமாமுனிகளின் தனியன்


ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||


திருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு இலக்க்கானவரை,

ஞானம் பக்தி வைராக்யம் போன்றவைகளின் கடலை,

எம்பெருமானார்மீது பெருத்த மையல் உடையவரான

 அழகிய மணவாளமாமுனிகளை அடியேன் (அரங்கநகரப்பன்)

வணங்குகிறேன் .



நம்பெருமாளே அரங்கநாயகம்  என்று பெயர் கொண்ட

 ஐந்து வயது அர்ச்சக குமாரனாக இந்தத் தனியன்

 ஸ்லோகத்தை ஒரு சிஷ்யனின் காணிக்கையாக

கொடுத்துவிட்டுச் சென்றார்.


அதனாலேயா ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு

இவரை ஆசாரியனாக இன்றும் கொண்டாடுகிறார்கள்.

மணவாள மாமுனிகள் எங்கே எழுந்தருளியிருந்தாலும்

ஆதிசேஷனில் இருப்பதைக் காணலாம்.


அவருக்கு அந்த சேஷ பீடத்தை அருளியவரும் நம்பெருமாளே.












ஆச்சாரியார் திருவடிகளே சரணம்....


அழகிய படங்களை நல்கிய அன்பர்களுக்கு  நன்றிகள் பல...

சுவாமி பற்றி மேலும் அறிந்துக்கொள்ள இந்த தளத்திற்கு சென்று

தரிசியுங்கள்...


guruparamparaitamil. azhagiya-manavala-mamunigal



அன்புடன்

அனுபிரேம்....





8 comments:

  1. அடியார் தரிசனம்.. அந்த அரங்கனின் தரிசனம்!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  2. அடியார் தரிசனம் அருமை

    ReplyDelete
  3. அருமையான பதிவு.மணவாளமாமுனிகளின் அவதார தினமான இன்று உங்கள் பதிவின் மூலம் மிகுந்த பாக்கியம் அடைந்தேன் , மிக்க நன்றி

    ReplyDelete
  4. புகைப்படங்கள் மிகத்தெளிவு

    ReplyDelete
  5. மளவாள மாமுனிகள்... இது புதுசா இருக்கு எனக்கு... நல்ல தகவல்.

    ReplyDelete
  6. மணவாளமாமுனிகளின் அவதார தினபதிவும், படங்களும் , தனியன் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. படங்கள் அருமை

    ReplyDelete