27 July 2017

ஸ்ரீ ஆண்டாள் வைபவங்கள்....


நேற்றைய பதிவில்  ஸ்ரீ ஆண்டாள்   அவதார திருநட்சத்திரமான ஆடிப்பூரம் பற்றியும்....

மேலும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் பிறப்பு,

சிறப்புகளையும் தரிசித்தோம்.....

அள்ள அள்ள குறையாத அமுத சுரப்பி போல் அவரின் வைபவங்கள் இன்னும் பல பல உள்ளன....


அவை அனைத்தையும் படிக்க படிக்க,...

கேட்க கேட்க  .....

ரசிக்க, ரசிக்க

ஆசை அதிகமாகவே செய்யும்...

அதனாலே  மீண்டும் ஒரு   பதிவு....


இன்று 27. 7. 2௦17.... ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாடிப்பூரத் தேரோட்டம்......










 




ஸ்ரீவில்லிப்புத்தூர் மூலவர்-வடபத்ர சாயி


     கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி , பூதேவி சமேதராக உள்ள வடபத்ர சாயியை  மூன்று வாசல்களின் வழியாக தரிசிக்கலாம். 

தலைமாட்டில் பிருகு முனிவரும், கால்மாட்டில் மார்க் கண்டேயரும் வணங்கி நிற்கின்றனர். 

மேலும் பஞ்ச மூர்த்திகள், தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னரர், சூரியன், சந்திரன், மது& கைடபர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

    சம்ஸ்கிருதத்தில் வடபத்ரம் எனப்படும் ஆலிலையில் பள்ளி கொண்ட பரமன் ஆதலால், இவர் ‘வடபத்ர சயனர்’ எனப்படுகிறார்.





ஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர்:ரங்கமன்னார் (ராஜமன்னார்)



ஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர் விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது நிஜார் மற்றும் சட்டை அணிவார். 

அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாள்.

‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். 

ஆண்டாளின் மாலையை (தொடைமாலை) அணிந்து கொண்டு அவர் காட்சியளிப்பார்...






 சுவாமி  ராமானுஜர்


      கள்ளழகருக்கு நூறு குடம் வெண்ணெயும், அக்கார வடிசலும்சமர்ப்பிப்பதாக தனது விருப்பத்தை ஆண்டாள் பாடினாள். 

அதை ஸ்ரீராமானுஜர் நிறைவேற்றினார்.

 பின்னர் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தபோது ‘என் அண்ணன் அல்லவோ!’ என்று அசரீரி ஒலியுடன் ஆண்டாள் விக்கிரகம் முன்னோக்கி நகர்ந்து ஸ்ரீராமானுஜரை வரவேற்றது.






ஆண்டாள் வைபவங்கள்


    தினமும் விடியற் காலையில் பிராட்டியின் சந்நிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும். 

தேவியின் திருப்பார்வை காரம்பசுவின் பின்புறம் விழும். தேவி தினமும் கண் விழிப்பது இப்படித்தான்.

   வேங்கடாசலபதி ஆண்டாள் மாலையை ஆசையுடன் அணிகிறார்.

 திருப்பாவையில் முதல் பத்தில் ‘அவன் திருநாமத்தைச் சொல்லு’ என்றும், 

இரண்டாவது பத்தில், ‘உயரியதான அவன் திருவடியை அர்ச்சனை செய்’ என்றும், 

கடைசி பத்து பாட்டுக்களில் ‘அவன் திருவடியில் உன்னை அர்ப்பணி’ என்றும் வலியுறுத்துகிறாள் ஆண்டாள்.


      ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது.


.பெருமாள் அருகில் கருடாழ்வார்


     பொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார்.

 ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். 

தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்குஅருகில் நின்றுகொண்டாராம்.


 ஆண்டாளின் திருமணத்துக்கு பெருமாளை விரைவாகச் சுமந்து வந்தவர் கருடன். அதனால் அவர் இங்கு மாப்பிள்ளைத் தோழனாக பெருமாளின் அருகிலேயே இருக்கிறார்.





ஆண்டாள் கிளி வைபவம்


    மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. இறையாட்சி புரியும். ஸ்ரீஆண்டாளுக்கு இடத் தோளில் கிளி. இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள். இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. 

கிளி மூக்கு-மாதுளம் பூ;

 மரவல்லி இலை-கிளியின் உடல்; 

இறக்கைகள்-நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;

 கிளியின் வால்-வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்; 

கட்டுவதற்கு வாழை நார்; 

கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன்.


     ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, 

சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் , 

அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.





     தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது.


சயன உற்சவம்


    ஸ்ரீஆண்டாளின் மடியில் ஸ்ரீரங்க மன்னார் படுத்திருக்கும் ‘சயன உற்சவம்’  ஏழாம் திருநாள் அன்று  நடைபெறும்...










பஞ்ச கருட சேவை.


     திரு ஆடிப் பூரத்தன்று   ஸ்ரீரங்கமன்னார்-ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

 இதன் ஐந்தாம் நாளன்று பஞ்ச கருட சேவை நடைபெறும். 

ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீநிவாசன், சுந்தரராஜன், திருத்தண்கால் அப்பன் மற்றும்  ரெங்கமன்னார் ஆகியோர் ஆண்டாளை திருமணம் செய்யப் போட்டி இடுவர்.

 இவர்களுடன் ஸ்ரீரங்கநாதரும் போட்டியில் கலந்து கொள்வார். முதலில் வரும் ஸ்ரீரங்கநாதரையே ஆண்டாள் திருமணம் முடிப்பாள்.





        
  திருவிழாவின்போது ஆண்டாளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது. 

சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன. 

 இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.



ஆண்டாள் வைபவம்-மூக்குத்தி சேவை


    மூக்குத்தி சேவை நடைபெறும் நாளன்று ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது


     கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். 

ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. 

‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 

அதுவரை விழா ஆரம்பமாகவில்லை.

 காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.


     உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார்.

 எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். 

கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.


ஸ்ரீரங்கத்தில்  (26.07.2017) நடைபெற்ற 

கோதை நாச்சியார் திரு அவதார நக்ஷத்திர

 மகோத்சவத்தின் சில காட்சிகள்....















வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்


ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர என் தலைவன் நாராயணன் வருகின்றான் என்ற செய்தியைக் கேட்டதும், அவனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால் செய்து புனித நீர் நிறைத்தக் குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல் எங்கும் தோரணம் நாட்டினார்கள். அதனை என் கனவில் நான் கண்டேனடி தோழீ....



நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

நாளை திருமண நாள் என்று குறித்து, பாளையும் கமுகும் நிறைந்திருக்கும் பந்தல் கீழ், சிங்கத்தைப் போன்ற மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுந்து வரக் கனாக் கண்டேன் தோழீ நான்...


இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை 
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்...


தேவர்களின் தலைவன் இந்திரனை முன்னிட்டு எல்லாத் தேவர்களும் வந்திருந்து என்னை மணப்பெண்னாய் பேசி மந்திரங்கள் சொல்லி எனக்கு புதிய உடைகளை அணியக் கொடுத்து, நான் அவற்றை அணிந்து வந்த பின் அந்தரியாகிய பார்வதி தேவி எனக்கு மணமாலை சூட்டிவிடக் கனாக் கண்டேன் தோழீ நான்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்..


அன்புடன்
அனுபிரேம்....

10 comments:

  1. பதிவும் சிறப்பு படங்களும் சிறப்பு.

    ReplyDelete
  2. படங்கள் அருமை. ஆண்டாள் பத்தி எழுதலாம்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க பதிவாக்கிட்டீங்க. நான் கொஞ்ச நாள் கழிச்சு பதிவு போடுறேன்

    ReplyDelete
  3. நிறைய விடயங்கள் படங்கள் அழகு.

    ReplyDelete
  4. பதிவு அருமை....அனு ஆஹா வாரணமாயிரம் பாடிட்டீங்களே...சூப்பர்....

    கீதா

    ReplyDelete
  5. அழகான படங்கள்..

    கோதை நாச்சியாரைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம்...

    பதிவில் அருமையான தகவல்கள்.. மகிழ்ச்சி..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  6. அழகான படங்கள்.

    தகவல்களும் வெகு சிறப்பு.

    ReplyDelete
  7. அழகான படங்கள் ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில் பற்றி கேள்விபட்டிருக்கேன். ஆடிப்பூர திருவிழா மிகச்சிறப்பாக இருக்குமென. அருமையான பதிவு.தெரியாத விடயங்கள் அறிந்துகொண்டாயிற்று. நன்றி அனு.

    ReplyDelete
  8. அழகான படங்களுடன் பதிவு அருமை.
    ஆடிப்பூர நாயகி தரிசனத்திற்கு நன்றி.
    படங்களும், செய்திகளும் மிக அருமை.

    ReplyDelete
  9. வட பத்ர சாயி ஒரே வாயில் தரிசனம். 3 வாயில் இல்லை.வடபத்ரசாயி அர்ச்சா திருமேனி
    சுதை.சிற்பம்.வர்ண.கலாப திருமேனி அவ்வளவு அழகு .சன்னதி கீழ் தளத்தில் நரசிம்மர் உம் சுதை திருமேனி தரிசிக்க கொள்ளை அழகு.

    ReplyDelete